24 Mar 2012

காவல்கோட்டம்? மார்க்சியமா?

தோழர் ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்தார். எப்போதுமே அவர் வந்தால் அவரது வேலையை முடித்தவுடன் எங்களுக்குள் விவாதம் வந்துவிடும். பெரும்பாலும் சண்டைதான் (ஆரோக்கியமான) நடக்கும். அதுபோலவே அன்றும் நடந்தது.
பல விஷயங்கள் குறித்து சண்டையிட்டு விட்டு, நாவல்கள் பக்கம் எங்கள் கவனம் திரும்பியது.
“காவல் கோட்டம் எப்படி தோழர்? என்றேன்.

“அது குறித்துப் பேச என்ன இருக்கிறது?என்றார்.
“என்ன தோழர், உங்கள் கட்சிக்காரர் எழுதியிருக்கிறார். இப்படி என்ன இருக்கிறது என்று சிம்பிளாக முடித்துவிட்டீர்களே! என்றேன்.
“சரி அதில் என்னதான் இருக்கிறது என்றார்.
“நான் இன்னும் படிக்கவில்லை தோழர். விமர்சனங்களைத்தான் படித்தேன். என்றேன்.
“என்ன சொல்கின்றன விமர்சனங்கள்? என்று கேட்டார்.
“ஒருவர் ஆயிரம் பக்க அபத்தம் என்கிறார். இன்னொருவர் ஆயிரம் பக்க அற்புதம் என்கிறார். இதில் உங்கள் விமர்சனம் என்ன? என்று கேட்டேன்.
“கள்ளர்கள் ஒடுக்கப்பட்டனர். குற்றபரம்பரையாக்கப்பட்டனர். சரி. அவர்களை அந்த ஒடுக்குதலில் இருந்து முற்றிலும் மீட்டெடுக்கப் போராடியாது யார் என்று சொல்கிறாரா? அந்த காலத்தில் தலித்துகளின் நிலை என்ன என்று விவரிக்கிறாரா? இப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டு மீண்டெழுந்த ஒரு சாதி இப்போது எவ்வாறெல்லாம் மற்றவரை ஒடுக்குகிறது என்பதைச் சொன்னாரா? என்றார்
“நான் இன்னும் படிக்கவில்லை தோழர், ஆனால் அது உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் கதைதானே! மார்க்சியக் கருத்துக்களைத்தானே வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இது கூட நான் படித்த விமர்சனங்களை வைத்துத்தான் சொல்கிறேன் என்று கேட்டேன்.
“களவு செய்பவன் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்படுகிறான். அந்த அதிகாரத்தில் உள்ளவனின் கதை எப்படி மார்க்சியக்கதையாகும். என்றார்.
“மேலும் களவு செய்வது எப்படி? களவில் உள்ள நுணுக்கங்கள் என்று களவை நியாயப்படுத்த பிரம்மபிரயத்தனங்கள் எடுக்கிறார். எல்லோரும் ஒடுக்கிவைத்தவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவந்தவர்கள் நாயக்கர்கள் என்பதை ஆணி அடித்தாற்போல் பதிய வைக்கிறார். அது ஒருவிதத்தில் நியாயம் என்றாலும், அது என்னவோ அவர்கள் நேர்மையாகச் செய்ததைப் போல் சொல்கிறார். கள்ளர்களின் அட்டூழியம் பொறுக்க முடியாமல் நாயக்கர்கள் அவர்களுக்கு பதவியைக் கொடுத்து தன்னைக் காத்துக் கொண்டார்கள் என்பதை வசதியாக மறக்கிறார்.என்றார்.
“நான்கூட களவுக்காரிகை என்று ஒரு மதிப்புரை படித்தேன் தோழர் என்றேன்.
“இதற்கு பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது தோழர். இது சாகித்ய அகாடமி விருது பெறும் என்பது நான் அறிந்ததுதான். அதற்காகவே பெரிய முயற்சி எடுத்து செய்யப்பட்ட நாவல்தான் இது. இன்னும் சொல்லப்போனால் நாளை இது பாடப்புத்தகங்கள் துணைப்பாடமாகக் கூட வரலாம் என்று ஊகிக்கிறேன். இப்போது சசிகலா அதிகாரத்தில் இல்லை. இருந்திருந்தால் அது இன்னும் விரைவுப்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.
“அப்போது, அதில் மார்க்சியப் பார்வை இல்லை என்கிறீர்களா? என்றேன்.
“இல்லை என்பதுதான் என் அபிப்ராயம். என்றார்.