7 Apr 2012

திருவொற்றியூர்! வடசென்னை!


இன்று எனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, வடசென்னையின் நிலைமை, குறிப்பாக, திருவொற்றியூரின் நிலைமை பற்றி பேச்சு வந்தது.
"திருவொற்றியூர்தான் சார்! சென்னையின் குப்பைத்தொட்டி" என்றார் நண்பர்.
"ஏன் சார்! அப்படி சொல்றீங்க!" என்றேன்.
"பாருங்களேன். ஒரு வளர்ச்சித் திட்டமாவது திருவொற்றியூருக்கென்று செய்கிறார்களா? திருவொற்றியூர் போகட்டும், வடசென்னையில் எங்காவது வளர்ச்சிப் பணிகள் எந்த காலத்திலாவது நடந்திருக்கிறதா?" என்றார்.
"என்ன சார் சொல்றீங்க! இப்பகூட ரோட்ட அகலப்படுத்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றினாங்களே!"
"சரியா சொல்றதா நினைக்காதீங்க சார்! ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறேன் என்று கூறி கட்டிடங்களை இடித்துப் போட்டு எத்தனை மாதங்களாகின்றன. இதுவரை அந்த இடிபாடுகளைக் கூட ஆகற்ற மனம் வரவில்லையே அரசுக்கு. அப்படியே அல்லவா கிடக்கின்றன. இதுவே மத்திய சென்னையிலோ, தென் சென்னையிலோ நடந்திருக்கட்டும். அது எத்தனை வேகமாக நடந்திருக்கும் தெரியுமா?"
"கவர்மென்ட் அப்படியா சார் பிரிச்சுப்பார்க்கும். தாய்க்கு மூத்த பிள்ளை வேறு இளைய பிள்ளை வேறா சார்?" என்றேன்.
"நீங்க கவர்மென்ட தாய்னு பார்ப்பதே தவறு சார். அது தாய் அல்ல, முதலாளி. முதலாளிதான் எங்க வருமானம் அதிகம் வருகிறதோ, அங்க உள்ள காரியங்களைச் சரியாக கவனிப்பான். வருமானம் சுமாராக வருகிற இடங்களை அதிகம் கவனிக்க மாட்டான்" என்றார்.
"அப்படி எங்கெங்கெல்லாம் நம்மள கவனிக்க மாட்டேங்குறாங்கனு நீங்க நினைக்கிறீங்க சார்!" என்றேன்.
"கண்டெய்னர்கள் நிறுத்திமிடங்கள் வடசென்னை, நச்சுப்புகை வெளியிடும் கம்பெனிகள் திருவொற்றியூரில், மெட்ரோ இரயில் வருதோ வரலையோ, வந்தாலும் அந்த மெட்ரோ ரயில சுத்தம் செய்யும் நிலையம் திருவொற்றியூரில், ஒரு பெரிய அரசு பள்ளி கிடையாது, ஒரு பெரிய அரசு மருத்துவமனை கிடையாது, இங்கே யாரிடமும் குறைகள் கேட்கப்படுவதில்லை. மூன்றாந்தர குடிமக்களாகத்தான் வடசென்னைவாசிகள் மதிக்கப்படுகிறார்கள்" என்றார்
மேலும், "எந்த ஒரு ஐ.டி. பார்க்கும் இங்கே வராது, எந்த பாலம் வசதியும் இங்கே வராது, எந்த தண்ணி வசதியும் இங்கே வராது. டாஸ்மாக் விதிவிலக்கு, அங்கு கூட சுத்தம் சுகாதாரம் பெரிய கேள்விக்குறி. ரோடு வசதி வராது, உட்புறச் சாலை வசதிகள் வரவே வராது, பேருந்து வசதி வரவே வராது. மாநகராட்சியும், மாநில அரசும்தான் நம்மள வஞ்சிக்குதுன்னா, மத்தியில பாருங்க. தெக்க போக நாம இரயில் ஏறும் எழும்பூரை மாத்தி இனிமே நீ தாம்பரம் போய்தான்டா ஏறுணுன்றான்" என்றார்.
"சார்! இவ்வளவு மக்கள் வஞ்சிக்கப்பட்டும், பெரிய அளவிலே போராட்டங்கள் எதுவுமே நடைபெறலயே சார்." என்றேன்.
"சார்! இங்க எல்லாமே அன்றாடங்காய்ச்சிகள்தான். இன்று வேலைக்குப்போனால்தான் சோறு. அப்படி இருப்பவன் கொடி புடிச்சு அலஞ்சா அவன் குடும்பத்த யாரு சார் பாக்குறது. எல்லாரும் ஈசியாக கேட்டுறாங்க போராட வேண்டியதுதானேன்னு. 'நீ சமுதாயத்துக்காகப் போராடு, நான் குடும்பத்தப் பாத்துக்குறேன்னு சொல்ல அவன் குடும்பத்தச்சார்ந்தவன் எவனாவது ஒருத்தன் இருந்தா அவன் வெளியே வந்து போராடுவான். இங்க இருக்குற நிலைமையில கூட்டுக்குடும்பங்களே அருகிப் போச்சு, தனியா குடியிருப்பவன் பொண்டாட்டி புள்ளகளைக் காப்பாத்துவானா, ஊருக்கு நன்மைனு கொடி புடிக்கப் போவானா? அப்படி எல்லாம் இங்க வாழுறவன் எவனுக்கும் கொடுப்புன இல்லையே." என்றார்.
"தெய்வப்புலவர்கள் பாடல் பெற்ற ஊர், இராசேந்திரச் சோழன் படைக்களம் அமைத்துத் தங்கியிருந்த ஊர், இராமலிங்க அடிகளார் தரிசித்த கோயில் உள்ள ஊர், பட்டினத்தார் சமாதியான ஊர், பக்தியில் திளைத்த ஊர், சென்னை உருவாவதற்கு முன்னே சிறப்பாக, செழிப்பாக இருந்த ஒரு ஊர் இப்படித்தான் நாறிக் கிடக்க வேண்டும் என்று தலையெழுத்துப்போல" என்றார்.