8 Jun 2012

அந்நிய மதங்கள் சிறுபான்மையா?


        ஒரு நண்பருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, சிறுபான்மை சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீடு பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம்.
        அப்போது நண்பர் சொன்னார், "என்னதான் ஒரு தலித் மதம் மாறினாலும் அவனது சமூக அந்தஸ்தோ, சமூக மரியாதையோ அல்லது எந்த விதத்திலும் அவன் உயர்ந்துவிடவில்லை. ஆகவே, அவன் மதம் மாறினாலும் அவனுக்கான ஒதுக்கீடு அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு கண்டிப்பாகத் தேவை'' என்றார்.
        "இது இந்திய மதங்களுள் ஒன்றில் மாறினால் பொருந்தும் என்றால் சரிதான்." என்றேன்.
        "எல்லா மதமும் வெளிநாட்டு மதம்தான். இந்து மதம் என்ன இந்திய நாட்டில் தோன்றியதா? எங்கோ இருந்து வந்த பாப்பான் சொல்லிக் கொடுத்த மதம்தானே." என்றார்.

        "ஆரியர் வெளியே இருந்த வந்தனர் என்றக்கூற்று எப்போதோ வலுவிழந்து, சரித்திர ஆதரங்கள் முன்னால் மண்டியிட்டுப் போய்விட்டது. ஆனால், இன்னும் பள்ளிப்பாடங்களில் இருந்து எடுக்கத்தான் நமக்கு மனம் வரவில்லை. இந்து மதம் இந்தியாவில் தோன்றியதில்லை என்று நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்" என்றேன்.

        "பார்ப்பனீயம் பேசும் நீங்க ஆயிரம் சொல்வீங்க. கவர்மெண்டே இன்னும் ஏத்துக்கல, நீ ஏத்துக்கோன்னு சொல்றீங்களே. உங்க மதம் நசுக்குனதுல நசுங்குனவங்க வேற மதம் மாறிய உடனே நிமிந்திடுவாங்களா? நீங்க சொல்ற வெளிநாட்டு மதங்கள் எல்லாம் இங்கு சிறுபான்மைதானே. அவங்களுக்கும் சரியான வாய்ப்புத் தரணுமே" என்றார் என் நண்பர்.
        "இந்து மதம் அல்லாத பிற இந்திய மதங்கள் அனைத்தும் சிறுபான்மைதான். கிறிஸ்தவமும் இஸ்லாமும் எப்படி சிறுபான்மையாகும். காளிமார்க் முன்னாடி கொக்கக்கோலா சிறுபான்மையா? அதனால்தான் இந்திய மதங்களுக்கு மாறினால் சிறுபான்மை இட ஒதுக்கீடு தவறில்லை என்று சொன்னேன்" என்றேன்.
        "நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, நீங்க சொன்னதையே சொல்றீங்களே! ஒரு தலித் மற்ற மதத்திற்கு மாறிவிட்டதாலேயே அவனுக்கு சமூக நீதி கிடைத்துவிட்டதாக அர்த்தமா?"
        "நான் அப்படிச் சொல்லவில்லை. இந்தக் குடிசையில் எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றுதானே அந்த மாளிகைகளுக்கு மாறுகிறார்கள். அந்த மாளிகைகளில் அவர்கள் சௌக்கியமாக அல்லவா இருப்பார்கள். பிறகு எதற்கு இட ஒதுக்கீடு?" என்றேன்.
        "மாளிகையிலும் அவர்கள் பெருக்குபவர்களாகவும், மலம் அள்ளுபவர்களாகவும்தானே இருக்கிறார்கள்?" என்றார்.
        "அப்படியென்றால், அந்த மாளிகைகளுக்கு ஏன் செல்ல வேண்டும். குடிசையிலேயே தங்கி இருக்கலாமே!"
        "உங்க மதத்தில் சாதிக்கொடுமை, சாதிப்பாகுபாடு என்று இவ்வளவு குப்பைகளை வைத்துக் கொண்டு, யாரும் மதம் மாறக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வருகிறது'" என்றார்.
        "நீங்கதானேங்க சொன்னீங்கள் அங்கப் போனாலும் மலம் தான் அள்ளுறாங்கன்னு, சாதிக்கொடுமை நீங்க இங்க மதத்துக்குள்ள இருந்து எவ்வளவோ பேர் பாடுபடுகிறார்கள். நாம இருக்கும் இடத்த நம்மதான் சுத்தமா வச்சிக்கணும். என் இடம் குப்ப குப்பன்னு சொல்லி அடுத்த வீட்டுல போய் படுத்துக்கக்கூடாது. அது அந்த தலித்துக்கு சொல்ல, உங்களுக்குச் சொல்றேன்." என்றேன்.
        "மதம் மாறிட்டா அப்படி என்னங்க உங்களுக்கு நஷ்டம். உங்களுக்குப் பிடிக்காதவன் உங்கள விட்டு போயிடுறான். உங்களுக்கு சந்தோஷம்தானே." என்றார்.
        "எனக்குப் பிடிக்காதவன் நீங்களே சொல்லிக்கிட்டா... அவனை ரொம்ப பிடிச்சவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. கொஞ்சம் கண்ணத் திறந்து பாருங்க. உங்க கண்முன்னாடியே நான் இருக்கேன். திரும்பி எல்லா பக்கமும் பாருங்க கோடிக்கணக்கான பேர் இருக்காங்க. இப்படியே இயேசு கூப்பிடுறாரு... நபி கூப்பிடுறாரு... அல்லா கூப்பிடுறாருன்னு எல்லாரும் மாறிட்டா... யோசிச்சுப் பாருங்க. நம்ம மண்ணோட அடையாளமே போயிடும்." என்றேன்.
        "இங்க இருக்கும் எல்லாரும் இந்த மண்ணுல பொறந்தவங்கதான். அப்புறம் எப்படிங்க நம் மண்ணோட அடையாளம் போயிடும்" என்றார்
        "ஒரு உதாரணத்துக்கு இந்தியாவில் எல்லோரும் கிறிஸ்தவத்துக்கு மாறிட்டாங்கன்னு வச்சுக்குங்களேன். அவன்கிட்ட உன் புனித பூமி எதுன்னு கேட்டுப் பாருங்க? யெருசலோம்பான், பெத்லஹம்பான், முஸ்லிமா மாறிட்டா மெக்காம்பான், மெதினாம்பான். கண்டிப்பா தன் நாட்டுல ஒரு இடத்தையும் சொல்லமாட்டான். மாறாம இந்துவா இருந்தான்னா... ஏங்க எனக்கு உவரிங்கம்பான் ஒருத்தன், ஏங்க எனக்கு திருச்செந்தூர்ங்கம்பான் இன்னொருத்தன்... ஏங்க எனக்கு காசிங்கம்பான் இன்னொருத்தன். இப்படியே எந்த இந்திய மதங்களில் இருந்தாலும் தன் நாட்டு இடத்தைத்தான் சொல்வான். ஆக, மதம் மாறிட்டா அடிப்படையே மாறிடுதா?" என்றேன்.
        "ஏங்க.. புனித பூமின்னு ஒரு விஷயம் மாறிட்டாதான் என்ன? இதுல மண்ணோட அடையாளம் என்ன மாறப் போகுது" என்றார் நண்பர்
        "கிறிஸ்தவமும் இஸ்லாமும் எங்கெல்லாம் சென்றனவோ அங்கெல்லாம் வெற்றி வாகை சூடின, இந்தியாவைத் தவிர. ஒன்று வாள்முனையில் அல்லது அந்தக் குடிமக்களை காட்டுமிராண்டிகளாய் சித்தரித்து, தாங்கள் நேரடியாக கடவுளிடம் நாகரிகம் கற்றவர்கள் போல் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி, பொருளாசை காட்டி, சமூக அந்தஸ்தைக்காட்டி இப்படித்தான் எல்லா இடங்களிலும் ஏமாற்றி மதம் மாற்றினார்கள். அப்படி மாறின பல தேசங்களைப் பாருங்க... எகிப்து, பாரசீகம் போன்ற தேசங்கள் எவ்வளவு பழைமை வாய்ந்த தேசங்கள். அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஒருகட்டத்தில் மதம் மாறிவர்கள்தான்... உலகமே காட்டுமிராண்டிகளாய் சுற்றித்திரியும் போது இந்தியாவிலும் மேற்சொன்ன தேசங்களில் வளர்ந்த நாகரிகம் இருந்தது. நாகரிகத்தின் உச்சியில் இருந்தவர்கள் அவர்கள். இன்று அவர்கள் தங்கள் பழம்பெருமையை எள்ளளவும் எண்ணிப்பார்ப்பதுண்டா. எகிப்து தேசத்தவனே, தன் பழம்பெருமைகளை எண்ணக் கூச்சப்படுகிறான். ஏனென்றால் இவன் இன்று வளர்ந்துவிட்டானாம். தன் மூதாதையர்கள் காபிர்களாம் (மூடர்களாம்). டேய் உன் மூதாதையர் இருந்ததிலிருந்து தேய்ந்து தேய்ந்து கட்டெரும்பாய் மாறிவிட்டாயே என்று அவனிடம் சென்று சொல்லிப் பாருங்கள். தான் அன்னியர்களின் பிடியில் சிக்கியிருப்பதை உணராதவனாக அவனது மதத்திற்காக உங்களை ஒரு சொருகு சொருகிவிடுவான்." என்றேன்.
        "ஏங்க... உங்க குத்தத்த மறைக்க என்னவெல்லாம் கதை அளக்கிறீங்க'' என்றார் என் நண்பர்.
        "சரி விடுங்க! இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல'' என்றேன்.

5 comments:

  1. நண்பரே நீங்கள் அந்நிய மதங்கள் சிறுபான்மையா? என்ற தலைப்பில் நீங்கள் உங்கள் நண்பரோடு விவாதித்து, எழுதியுள்ளதில் முழு விவாதத்துக்குள்ளும் நான் வருவதற்கு முன் பொதுவாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்,அன்னியம் என்பது மனிதனில் இல்லை.

    நீங்கள் எண்ணுவது போல் நாட்டுக்கொரு மதம் என்றும், மாநிலத்துக்கொரு கடவுளென்றும், மொழிக்கொரு தெய்வமென்றும்,சாதிக்கொரு சாமியென்றும், குலத்துக்கொரு கோயிலென்றும் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொண்டால். மேலும்,நாமும் விவாதிக்கலாம்.

    ReplyDelete
  2. நண்பரே! நீங்கள் அந்நிய மதம் என்ற வார்த்தையை மட்டும் பார்க்கிறீர்கள் போல, இங்கு நான் சொல்ல வந்த கருத்து அவை சிறுபான்மையா என்று?

    நாட்டுக்கொரு மதம் என்றும், மாநிலத்துக்கொரு கடவுளென்றும், மொழிக்கொரு தெய்வமென்றும்,சாதிக்கொரு சாமியென்றும், குலத்துக்கொரு கோயிலென்றும் இருந்ததுதான் பழைய வரலாறு. அதையெல்லாம் சர்வதேசியமாக்கியது கிறிஸ்தவமும் இஸ்லாமும். என்னதான் அத்தனை தெய்வங்களாக வழிபட்டாலும், சென்றடைவது ஒரே கடவுளிடம்தான் என்று இந்துக்கள் தெளிவாகவுள்ளனர்.

    உலகிலேயே சர்வதேசியம் பேசும் அமைப்புகள் கம்யூனிசம் மற்றும் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஆப்பிரகாமிய மதங்களே. சர்வதேசியம் இந்திய மண்ணில் எடுபடாது என்றுதான் நான் நினைக்கிறேன். மேற்சொன்ன இரண்டு மதங்களும் அந்நிய மதம் என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கிறதா என்ன?

    ReplyDelete
  3. இந்தச் சுட்டியைப் பார்க்கவும். http://www.jeevaappam.in/2012/06/blog-post_27.html

    ReplyDelete
  4. //இந்தியாவின் பழம்பெரும் மதம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தில்//
    இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேய பழைமையான வாழ்க்கைமுறை
    //இயேசு கிறிஸ்து எந்த மனிதனுக்கும், எந்த நாட்டிற்கும் அந்நியர் அல்ல என்பதை இவர்கள் முதலாவது புரிந்து கொள்ள வேண்டும்.//
    இயேசு மட்டுமில்லீங்க ஆபரகாமிய மதங்கள் அனைத்துமே.
    //இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுகளாக இயேசு கிறிஸ்துவை பின் பற்றுகிறவர்கள் உண்டு,//
    ஏங்க நானும் இயேசு கிறிஸ்துவ பின்பற்றத்தான் செய்கிறேன். ஆனால் உங்கள் கிறிஸ்தவம் தான் எங்களுக்கு வேண்டாம் என்கிறேன். இந்தியர்கள் நல்லவர்களே எப்போதுமே ஏற்றுக் கொள்வார்கள். அல்லவர்களே! இராண்டாயிரம் ஆண்டா? யாரைச் சொல்கிறீர்கள் தோமாவின் வருகையையா? அந்தக் கதைதான் வலைத்தளம் எங்கும் பரவியிருக்கிறதே!
    //இந்த மார்க்கம் உலகமெங்கும் இன்று பரவி வேர் ஊன்றி இருக்கிறதென்றால் இது சாதாரணமாக நடந்த செயலல்ல, அடிகளும், மிரட்டல்களும் சிறை வாசங்களும், உயிர் தியாகங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல.//
    ஏன் ஒரு மதமாற்றத்திற்காக இத்தனைத் தியாகங்கள். நாங்கள் தான் இயேசுவை (அவர் குணத்தை, போதனைகளை) ஏற்கிறோம் என்கிறோமே. ஆமாம் இந்தியாவில் அப்படியென்ன உங்களுக்கு கொடுமை நடந்துவிட்டது. தோமாவைக் கொண்டுவிட்டார்கள் என்பீர்கள். அவர் இங்கு வரவே இல்லையே என்போம் நாங்கள். ஒரிசாவில் பாதிரியாரை எரித்துவிட்டார்கள் என்பீர்கள். வேறு என்ன சொல்வீர்கள்.
    //உலகம் கிறிஸ்தவ மயமாக வேண்டும் என்பது நோக்கமல்ல, மனிதன் மனமாற்றம் பெற்று, உண்மை கடவுளை அறிந்து வழிபட வேண்டும் என்பதும், மறுமை வாழ்வில் கடவுளோடு மனிதன் இணைக்க படவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். பணத்தை காட்டியோ, மிரட்டியோ ஒரு மனிதனை வெகு நாட்கள் எந்த கிறிஸ்தவர்களின் நோக்கமல்ல. //
    ஐய்யயோ என்னங்க இப்படி அநியாயமா பேசுறீங்க. ஒரு கிறிஸ்தவர் அல்லாதவரிடம் இந்த வரிகளைக் காட்டி இல்லை என்ற பதிலைப் பெற்றுவிடுங்கள் பார்ப்போம்.
    நாகரீகத்தையும் இவர்கள் அழித்து விட்டார்கள் என்று கூக்குரல் இடுபவர்கள் உண்டு. அவர்களிடத்தில் கேட்கிறேன்.

    மனிதனுக்கோ தாங்கள் இருக்கும் தெருவில் நடக்கக்கூட அனுமதியில்லை. பள்ளியும் படிப்பும் கூட சிலருக்கு மட்டுமே என்ற உங்கள் நாகரீகத்தை மாற்றுபவர்கள் காட்டுமிராண்டிகள்தான்.

    மக்களாட்சிக்கும் வித்திட்ட தன்னலமில்லா உண்மை கிறிஸ்தவ மிஷனரிகள் உங்கள் பார்வையில் பாரம்பரியங்களை அழிக்க வந்தவர்கள்தான்.
    //
    ஏற்றத்தாழ்வு எங்குதான் இல்லை. இதே கதை உங்கள் திருச்சபைகளில் நடக்கிறதே. நீங்கள் குறிப்பிடும் அந்த 2% தான் இந்த நாட்டை ஆண்டனர் என்று நினைக்கிறீர்களா? அந்த ஏற்றத்தாழ்வை ஊதிப் பெரிதாக்கியதில் ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷினரிகளுக்குப் பெரிய பங்குண்டு. ஆங்கிலேய ஆக்கிரமிப்பு, இஸ்லாமிய ஆக்கிரமிப்புமே 1500 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்திருக்கின்றன. ஆங்கிலேய ஆட்சியில் இந்துக்களை தனக்குச் சமமாக நடத்தினார்களா? இஸ்லாமியர் ஆட்சியில் இந்துக்களை சமமாக நடத்தினார்களா? நம் நாட்டில் நம் வாழ்க்கைமுறைப்படி வாழ்வதற்கே வரி செலுத்தியவர்கள் நாம். ஆபிரகாமிய மதங்களைத்தான் அந்நியமாகப் பார்க்க வேண்டியிருக்கிறதே தவிர உங்கள் அந்நியர் என்ற நான் குறிப்பிடவே இல்லை. நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்திய கிறிஸ்தவர்களை என் சொந்த உடன்பிறப்பாகவே பார்க்கிறேன். கிறிஸ்தவத்தைத்தான் ஏற்றுக் கொள்ளமுடியாது என்கிறேன்.
    மனிதனின் மனமாற்றத்திற்கும் பாடுபடுபவர்கள் உங்கள் பார்வையில் கேலி சித்திரங்கள்தான்.//
    உலத்துக்கே அறம் சார்ந்து வாழும் வாழ்வைக் கற்றுக் கொடுத்தவர்கள் நாம். நம் சமூக மாற்றத்திற்கு அந்நியர்களைக் கூப்பிடுவது சரியான மாற்றமாக எனக்குத் தெரியவில்லை. நான் யாரையும் கேலிச்சித்திரமாகப் பார்க்கவில்லை. பயங்கரமாகவே பார்க்கிறேன். அந்தப் பயங்கரத்தில் என் சகோதரராகிய நீங்களும் சிக்குண்டு போகிறீர்களே என்றே கவலைப்படுகிறேன்.
    ///கட்டுகிற கட்டிடத்திலோ இல்லை. மனிதனின் மனதில் இருக்கிறது அது மனிதனை மனிதன் எந்த ஏற்றதாழ்வும் //
    அதைத்தானே நானும் சொல்கிறேன். இந்திய வாழ்க்கைமுறையும் சொல்கிறது.

    ReplyDelete
  5. தமிழ் மண்ணின் அடையாளம் மாறிவிடும். என்று பதறுகிறவர்கள் உண்டு.//
    மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதில் அதி தீவிர நம்பிக்கையுடையவர்கள்தான் இந்தியர்கள். அதனால் இந்து மதம் அவ்வளவு மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு இன்று பழைமையான மதமாக உலாவர முடிகிறது. வேறு எந்த மதமும் மாறியதாக எள்ளளவும் தெரியவில்லை. அது சரி செழியன் என்ற பெயர் ராபர்ட் என்று மாறும்போது நம் மண்ணின் அடையாளம் மறைவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இது பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் உண்மை அவ்வளவு சாதாரணமானது இல்லை. சகோதரரே! ராபர்ட்க்கும் இந்தியாவிற்கு என்ன சம்பந்தம் இருக்க முடியும். செழியன் என்றால் செழிப்பானவன் என்று அர்த்தம், ராபர்ட் என்றால் என்ன பொருள், அது என்ன மொழி. நாங்கள் எங்கள் சகோதர மொழியான சமஸ்கிருதத்தையோ, ஹிந்தியையோ படிக்கமாட்டோம். ஆனால் உங்கள் லத்தீனையும், கிரேக்கத்தையும், அரமெக்கையும் படித்து அந்த பெயருக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமா?
    வெளி நாடுகளுக்கு கிறிஸ்தவம் சென்றதே தவிர அங்கிருந்து இங்கு புதிதாக ஏற்றுமதி ஆகவில்லை.//
    ஐயோ என்னங்க சொல்ல வரீங்க. என் தலையே சுத்துதே.
    வெளிநாட்டு கைக்கூலியோ அல்ல. எந்த நாடும் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல.//
    சகோதரரே! உங்களை அந்நியர், அந்நியக்கைகூலி என்று சொல்ல எப்படி எனக்கு மனம் வரும். ஆனால், ஆட்டுக்குத் தெரியுமா பூசாரி நம்மை பலி கொடுக்கப் போகிறான் என்று. மேய்ப்பர் என்று நீங்கள் செல்லும் இடம்தானே சிந்திக்க வைக்கிறது. உங்களைப் போன்றோர் இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து விடுபடுவது என்னை வருத்தமடைய வைப்பதாலேயே மேற்கண்ட பதிவை எழுதினேன்.
    நயமாக பேசியோ மதம் மாற்ற வில்லை அப்படி ஒருவரையும் மாற்றவும் முடியாது.//
    அப்படியா?
    மற்றவனெல்லாம் அந்நியன் என்றும் பேசி மட்டுப்படுத்தவும் வேண்டாம்.//
    சத்தியமாக நான் அப்படி நினைக்கவில்லை. இறக்குமதி பிசாவை நம்பாதீர்கள், நம்மூர் இட்லியே நல்லா இருக்குன்னு சொல்றேன். கேக்க மாட்றீங்க!
    பயிர் வளரத்தான் விதைக்க வேண்டும் பதர் விளைய விதைக்க வேண்டியது இல்லை//
    இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லையே. ஐயா யாராவது என்ன வந்து பிடிச்சுக்குங்க, இயற்கையா வளர்வது காடு. செயற்கையா மனுஷன் பண்படுத்துனதுல வளர்வது வயல், தோட்டம் இவையெல்லாம். தோட்டம் வந்து காடுகிட்ட சொல்லிச்சாம். நான்தாண்டா உண்மையானவன்னு. சூப்பர்ல!

    ReplyDelete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.