12 Jun 2012

கம்யூனிச பொன்னுலகம்

முன்பு ஒரு நாள், நான் ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, "ஜனநாயகம் என்ற பேரில் முதலாளிகள் வாழ்கின்றனர். தொழிலாளர்கள் சாகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்." என்றார்.

"இந்த நிலை மாறணும்னா, என்ன செய்யணும் தோழர்" என்றேன்.

"புரட்சி வெடிக்க வேண்டும். கம்யூனிசம் ஜெயிக்க வேண்டும். அப்போது மேடு பள்ளம் இல்லாத சமூக நிலை உருவாகும்." என்றார்.

"எப்படி அப்படி உருவாக முடியும்" என்றேன்.

"முதலாளிகளே இல்லாத நாட்டில் தொழிலாளர்கள் அவர்களே உற்பத்தி செய்து கிடைக்கும் லாபத்தில், சமமான ஊதியம், சமமான அந்தஸ்து என்று எல்லாம் சமமாகத்தானே கிடைக்கும்" என்றார்.

"அந்த உலகத்தை யார் ஆள்வார்கள் தோழர்" என்றேன்.

"மக்கள்தான் ஆள்வார்கள்" என்றார்.

"அதுதானே ஜனநாயகம்" என்றேன்

"இல்லை நான் சொல்லுவது கம்யூனிச சமத்துவம். நீங்கள் சொல்வது முதலாளித்துவ ஜனநாயகம்" என்றார்.

"அப்போ! கம்யூனிஸ்ட் ஆட்சியில் மக்கள்தான் தங்கள் பிரதிநிதிகளை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பார்களா?"

"இல்லை கட்சிக்காரர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள்" என்றார்.

"ஏன்! அது எப்படி மக்களாட்சி ஆகும்?" என்றேன்.

"கம்யூனிசத்தில் ஒரே கட்சி ஆட்சி முறைதான். மக்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகளே பிறகு என்ன அது மக்களாட்சி தானே"

"இராணுவ ஆட்சி என்று பச்சையாக, நேரடியாகச் சொல்லாமல் விஞ்ஞானக் கம்யூனிசம் என்று அதிமேதாவித்தனமாக பூசி மொழுகி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் இது ஏதோ மதமாற்றம் போல் தெரிகிறதே. அவர்களுக்கு உங்களுக்கு ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் உங்களுக்கு அவர்களே மேல். அவர்களாவது, காசு, பணம், கல்வி என்று காட்டி மதம் மாற்றுகிறார்கள், மிஞ்சிப் போனால் வாளை நீட்டுவார்கள். ஆனால் நீங்களோ விஞ்ஞானம், விஞ்ஞான சோசலிசம், விஞ்ஞான கம்யூனிசம் என்று சொல்லி ஏமாற்றியல்லவா இளைஞர்களை விழுங்குகிறீர்கள். அவர்கள் உங்களையும் மேதாவிகளாக நினைத்து, தங்களையும் மேதாவிகளாக நினைத்து கையில் துப்பாக்கி ஏந்தி இஸ்லாமியத் தீவிரவாதி போல் திரிகிறார்கள் ஜிகாத்துக்காகக் (சோசலிசப் பொன்னுலகத்திற்கான புனிதப் போருக்காக) காத்திருக்கிறார்கள்" என்றேன்.

பதிலுக்கு அவர் என்னை பார்ப்பான் என்றார், நான் இல்லை, நான் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து வருபவன் என்றேன், அப்படியே இருந்தாலும் பார்ப்பனீயம் கற்றுக் கொடுத்ததை வாந்தி எடுப்பவர்கள் எல்லோரும் பாப்பான்கள்தான் என்றார். ஆரியச் சிந்தனை என்றார். இந்துத் தீவிரவாதி என்றார். இப்படியே சிறிது நேரம் என்னை வசைபாடிவிட்டுச் சென்றுவிட்டார்.

        இன்று தினகரனில் தலையங்கம் படித்தேன். அதனால் இந்த மேற்கண்ட உரையாடல் எனக்கு நினைவுக்கு வந்தது.

'இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இந்த கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கி இருக்கும்போதே இப்படியெல்லாம் நடக்கிறதே. இவர்கள் முழு இந்தியாவையும் ஆதிக்கம் செலுத்தினால் என்ன நடக்கும். கம்யூனிஸ்ட்களில் பலர் நல்லவர்களாய் இருப்பதாலேயே அந்தக் கட்சிக்கு மதிப்பு இருக்கிறது. ஆனால், அவர்கள் ஆட்சியைப் பிடித்தால் அந்த நல்லவர்கள் எப்படிக் கொலைகாரர்களாக மாறுவார்கள்' என்பதை அந்தத் தலையங்கள் சூசகமாக தெரிவிப்பதாக நினைக்கிறேன்.

12.06.2012 தினகரன் தலையங்கம்

ஆமாம், கட்சியை காட்டிக் கொடுத்த துரோகிகளை போட்டுத் தள்ளினோம், என்ன தப்பு... என்ற கேள்வி கேரள அரசியலில் நீண்ட காலத்துக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கும்மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து புது கட்சி தொடங்கிய டி.பி.சந்திரசேகரன் கொலையின் மர்ம முடிச்சுகள் விலகுவதற்கான தூரத்து அறிகுறிகூட தென்படவில்லை.

அவரது மரணம் குறித்து கட்சி மவுனம் காத்தபோது முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தனக்கே உரித்தான துணிச்சலுடன் அதை கண்டித்தார். கட்சியின் மாநில தலைமை பொறுப்பிலுள்ள பினராயி விஜயனின் ரத்தக்கொதிப்பு தாறுமாறாக எகிறும் அளவுக்கு விமர்சித்தார். மார்க்சிஸ்ட் கட்சி பிறப்பதற்கு முன்பிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவராக இருந்த எஸ்..டாங்கேயின் சர்வாதிகார போக்குடன் விஜயனின் நிர்வாகத்தை ஒப்பிட்டார்.

விஜயன் இந்த வலையில் சிக்காமல் தப்பினாலும், அவரது தீவிர ஆதரவாளரான இடுக்கி மாவட்ட செயலாலர் எம்.எம்.மாணி மாட்டினார். அரசியல்ரீதியாக யாரெல்லாம் நமக்கு எதிரிகள், துரோகிகள் என்ற பட்டியல் தயாரித்து அவர்களை ஒழித்துக் கட்டுவது புதிதல்ல. ஏற்கனவே பலரை அப்படி போட்டு தள்ளியிருக்கிறோம் என்று மாணி கொடுத்த விளக்கம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மக்களுக்கு அது எதிர்பாராத செய்தியல்ல என்றபோதிலும், ஒரு பொதுவுடமை கட்சியின் நிஜ முகம் அந்த கட்சியின் தோழர் மூலமாகவே அம்பலம் ஏறியதை வரவேற்றனர்.

இதற்கு மேலும் விஜயனை பதவியில் நீடிக்க விட்டால் கட்சிக்கு நல்லதில்லை என்று பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்துக்கு அச்சுதானந்தன் கடிதம் எழுதினார். அச்சுதானந்தனை விட்டுவைத்தால்  கட்சி காணாமல்போய்விடும் என்று விஜயனின் ஆட்கள் எச்சரித்தனர். இந்த சூழ்நிலையில் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு, அச்சுதானந்தன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மாநில அளவிலேயே பேசி தீர்த்துக் கொள்ளுமாறு பணித்துள்ளது. இரண்டு தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தலைமையை மாற்றியாக வேண்டும் என்ற கருத்தை அதில் அச்சுதானந்தன் பலமாக வலியுறுத்தியுள்ளார்.

மக்களிடம் பெரும் செல்வாக்கு இருப்பதால் அச்சுதானந்தன் மீதும், கட்சி அமைப்பை இரும்புப் பிடியில் வைத்திருப்பதால் விஜயன் மீதும் மார்க்சிஸ்ட் தலைமை கடைசி வரை நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தோழர்கள் பேசிக் கொள்வது மீண்டும் உண்மையாகி இருக்கிறது.

நன்றி: தினகரன்