22 Jan 2013

ஷிண்டேவும் தீவிரவாதமும்



திடீரென உள்துறை அமைச்சர் ஷிண்டே "இந்து தீவிரவாதம்" குறித்து கவலைப்பட என்ன காரணம் இருக்க முடியும்? எல்லையில் பதட்டமாக இருக்கக்கூடிய இத்தருணத்தில் இந்த அறிவிப்பு. அதுவும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட இந்தக் கருத்து யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

இன்று இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் முக்கிய தீவிரவாதி, ஜமாத்-உத்-தவா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சையத் நமது உள்துறை அமைச்சரின் வாசகத்தையே கோடிட்டுக் காட்டி "உலக நாடுகள் இந்தியாவை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்" என்று கேட்கிறான்.


ஜெய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே பேசும்போது, "ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம். சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணையில், வலதுசாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது." என்று சொல்லியிருந்தார்.

இவர்தான் நம்நாட்டின் உள்துறை அமைச்சர். அப்படிப்பட்ட பயங்கரவாத பயிற்சிமுகாம்கள் நடப்பதாகத் தெரிந்தால், அதை எளிதாக நடத்தவிடாமல் தடுத்துவிடமுடியுமே. யார் இவரைத் தடுத்தது? அப்படி, ஏதாவது ஒன்றைத் தடுத்திருக்கிறாரா? எங்கு பயிற்சி முகாம்கள் நடக்கின்றன? அந்தப் பயிற்சி முகாம்களுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இவையெல்லாம் தெரிந்திருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நம் நாட்டு இராணுவ வீரர்களின் சடலத்தில் இருந்து எதிரிநாட்டு இஸ்லாமியத் தீவிரவாத ராணுவம் தலையைப் பிய்த்தெடுத்துக் கொண்டு போகும்போதுதான் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வளவு அபாயமான பயங்கரவாத இந்துத் தீவிரவாதப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே!

அப்படி ஏதாவது நடந்திருந்தால்தானே தடுத்திருப்பார். வெறும் வாய்க்கு அவலைக் கொடுத்துவிட்டால், மக்கள் ஏன் நம்மைக் குடையப்போகிறார்கள் என்று நினைத்து வெளியிட்ட வாசகமாக அல்லவா இது படுகிறது. மக்கள் வாய்க்கு அவல் கொடுத்தால் பரவாயில்லை. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு குளிர்ச்சியையல்லவா கொடுக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை குளிவிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றனவா இப்படிப்பட்ட வாசகங்கள்? அதை ஏன் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் செய்ய வேண்டும்.

ஏற்கனவே, ப.சிதம்பரம் இப்படித்தான் "காவித் தீவிரவாதம்" குறித்து வாய்திறந்தார். இப்போது ஷிண்டே. ஷிண்டே கூறியிருப்பதையும் கூர்ந்து கவனித்துப்பார்த்தால் "சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணையில், வலதுசாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது" என்று கூறுகிறார். சந்தேகத்திற்கே இந்த அடியா? நிரூபிக்கவில்லை. அப்படியிருந்தும், இந்து தீவிரவாதம், காவித் தீவிரவாதம் என்று வாய்கிழிய பேசுகிறார்கள் அறிவுஜீவிகள்.

கண்ணெதிரே நடந்த மும்பைத் தாக்குதல் வழக்கிலேயே யார் காரணம்? எங்கிருந்து வந்தார்கள்? எப்படித் திட்டமிடப்பட்டது? என்பதெல்லாம் ஊரறிந்த சிதம்பர ரகசியமாக இருக்கும்போது, "தங்களை குற்றவாளிகள் என சுட்டிகாட்டிய இந்தியாவால் 5 ஆண்டுகளாகியும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை" என்று ஹபீஸ் டூவிட்டரில் தெரிவித்துள்ளான்.

இப்போதைய உள்துறை அமைச்சரோ, அல்லது முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்போதை நிதி அமைச்சருமாகிய  ப.சிதம்பரமோ "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற வார்த்தையை மறந்தும் உச்சரிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்துக்களும், காவி தரிப்பவர்களும்தான் தீவிரவாதிகளாகத் தெரிவார்கள்.

கூடவே ஹபீஸ் "பாகிஸ்தானில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் இந்தியாதான்" என்றும் குற்றம் சாட்டியிருக்கிறான். எதிர்காலத்தில் "இப்படிப்பட்ட" இந்தியாவின் உள்துறை அமைச்சர்கள் "இருந்தாலும் இருக்கும், எங்களை அறியாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, விஸ்வ இந்து பரிக்ஷத் அமைப்பு, பஜரங் தளம், ராம் சேனா, இந்து மக்கள் கட்சி, போன்ற அமைப்புகள்தான் பாகிஸ்தானில் இப்படிப்பட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்தின" என்று சொன்னாலும் சொல்வார்கள். நாம் இதையெல்லாம் கேட்டுக் கொண்டும் நமக்கு இன்னும் நல்லது செய்வார்கள் என்று அவர்களையே ஆட்சிப்பீடத்தில் ஏற்றிவைத்துக் கொண்டுமிருப்போம்.

இந்த நாடகத்தில் மற்றுமொரு அதிர்ச்சி கட்டம், திக் விஜய் சிங் "இந்து தீவிரவாதம்" என்று சொல்லியதுதான் தவறு என்று சொல்லியிருக்கிறார். இவர் என்னவோ உத்தமர்போல்.

இவர்களது குரல் எல்லாம் யாருக்குச் சொந்தமாவை?