25 Jan 2013

குருட்டுப்பார்வை...?



கடுமையான நோய்க்கு உள்ளான இருவர், மருத்துவமனையில் ஒரே அறையில் இருந்தனர்.

அதில் ஒரு மனிதர் ஒவ்வொரு மதியமும் ஒரு மணி நேரம் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து நுரையீரலில் கட்டியிருக்கும் சளியை எடுக்க அனுமதிக்கப்பட்டார்.


அவரது படுக்கை, அந்த அறையின் ஒரே ஜன்னலுக்கு அருகில் இருந்தது.

மற்றொரு மனிதர், தனது முழு நேரத்தையும் படுக்கையில் முதுகு சாய்த்தே கழிக்க வேண்டியிருந்தது.

அவர்கள் இருவரும் மணிக்கணக்காகப் பேசிக் கொள்வார்கள்.

தங்கள் மனைவியர், குடும்பம், வேலை, இராணுவத்தில் அவர்கள் ஆற்றிய சேவைகள், விடுப்பில் சென்று பொழுது கழித்த இடங்கள் என எல்லாவற்றையும் பேசிக் கொள்வார்கள்.

ஒவ்வொரு மதியமும், ஜன்னலருகே உள்ள மனிதர், எழுந்து உட்கார்ந்து பொழுது போவதற்காக, ஜன்னலுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தனது அறையில் உடன் இருந்தவருக்கு விளக்கித் தெரிவிப்பார்.

இப்படியே கேட்டு கேட்டு அந்த மற்றொருவர், அந்த ஒரு மணிநேரம் இவர் விவரிப்பதைக் கேட்பதற்கென்றே வாழ ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அவரது உலகம் அகலமானதாகவும், உயிரோட்டமாகவும், வண்ணமயமாகவும் இருக்கும்.

அவரது உலகத்தில், அந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு பூங்காவும், அதைத்தாண்டி ஒரு ஏரியும் இருந்தன.

குழந்தைகள் நீரில் காகித ஓடங்களை விட்டுக் கொண்டிருக்கும்போது அதனருகே வாத்துகளும், அன்னங்களும் மிதந்து வந்தன. இளங்காதலர்கள் கரத்தோடு கரம் கோர்த்து வண்ணமயமான மலர்களுக்கு மத்தியில் உலா வந்தனர். தூரத்தில் அந்த நகரத்தின் கட்டிடங்கள் கோடுகளாகத் தெரிந்தன.

ஜன்னலருகே இருந்த மனிதர் விவரிக்க, அடுத்த கட்டிலில் படுத்திருப்பவர், கண்களை மூடி அந்தக் காட்சியை மனக்கண் முன் காண்பார்.

ஒரு இளவெயில் மதிய வேளையில், ஜன்னலருகே இருந்த மனிதர், வெளியே ஒரு மெல்லிசை அணிவகுப்பு நடைபெறுகிறது என்று சொன்னார்.

அடுத்து இருந்தவருக்கு அந்த ஒலி காதில் விழவில்லையே தவிர, அவரது மனக்கண் முன் ஜன்னலுக்கருகே இருப்பவர் சுட்டிக்காட்டியபடி அந்த அணிவகுப்பின் காட்சிகள் நகர்ந்தன.

இப்படியே நாட்களும், வாரங்களும், மாதங்களும் கடந்தன.

ஒரு நாள் காலையில், அவர்கள் இருவரும் குளிப்பதற்காக செவிலி நீர் கொண்டு வந்திருந்தாள். ஜன்னலுக்கருகே இருந்த மனிதர் உயிரற்றவராகக் கிடப்பதைக் கண்டாள். அவர் உறக்கத்திலேயே இந்த உலகத்திலிருந்து விடுபட்டிருந்தார்.

செவிலி மிகுந்த துன்பத்துக்குள்ளானாள், உதவியாளர்களை அழைத்து அந்த உயிரற்ற உடலை அப்புறப்படுத்தச் சொன்னாள்.

நேரம்பார்த்து, அந்த மற்றொரு மனிதர், தான் அந்த ஜன்னலுக்கருகே படுத்துக் கொள்வதாகச் செவிலியிடம் கேட்டார். அவளும் மகிழ்ந்து, தேவையான உதவிகளைச் செய்து, அவர் வசதியாகப் படுத்தபிறகு, அவரைத் தனியாக விட்டு அகன்றாள்.

மெதுவாக, வலியைத் தாங்கிக் கொண்டு, படுக்கையில் தனது கைமுட்டியால் முட்டுக் கொடுத்து, அந்த உண்மையான உலகத்தைக் காண ஆவலுடன் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்க முயற்சி செய்தார்.

தன்னை மிகவும் வருத்திக் கொண்டு, மெதுவாக கட்டிலுக்கு அருகே இருந்த ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்.

வெறும் சுவர்தான் இருந்தது.

பிறகு வந்த செவிலியிடம் தனது அறை நண்பர் அப்படி அதி அற்புதமான காட்சிகளை விவரித்து தன்னை ஏமாற்ற எது காரணமாய் இருந்திருக்கும் என்று கேட்டார்.

அந்த மனிதர் ஒரு குருடர், அவரால் அந்தச் சுவற்றைக் கூடக் காணமுடியாது என்று செவிலி மறுமொழி சொன்னாள்.

"அவர் உங்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்" என்றாள் செவிலி.

இறுதியுரை:

தனது நிலை மறந்து மற்றவர்களை மகிழ்வூட்டுவது மிகச்சிறந்த மகிழ்ச்சியாகும்.

துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதால், பாதி துன்பம் குறைந்துவிடும். ஆனால் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டால், அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

நீங்கள் உங்களை, எல்லாம் உடைய பணக்காரராக உணர வேண்டுமா? உலகத்தில் பணத்தால் வாங்க முடியாதது உங்களிடம் என்னென்ன இருக்கின்றன என்று ஒவ்வொன்றாக எண்ணிப் பாருங்கள்.

இன்று என்பது ஒரு மிகப்பெரிய பரிசு, அதனால் தான் அதை ஆங்கிலத்தில் Present என்று அழைக்கிறார்கள்.

மேற்கண்ட இந்தக் கதையும், இறுதியுரையும் ஸ்டம்பிள் அப்பானில் Spirituality என்று ஸ்டம்பிள் செய்யும்போது www.globalone.tv என்ற வலைப்பூவில் Eric Allen Bell என்பவர் ஏப்ரல் 2, 2011 அன்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த பதிவு காணக்கிடைத்தது. 

அந்தப் பதிவில் இருந்த இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப் போகவே, அதை மொழியாக்கம் செய்து வெளியிடுகிறேன். கடைசி வரியை மட்டும் சரியாக மொழிபெயர்க்க முடியவில்லை (Present என்ற ஆங்கிலச் சொல் வந்துவிட்டது). அது ஒரு குற்றமாகவும் எனக்குப் படவில்லை. இங்கேச் சொடுக்கினால் ஆங்கிலத்தில் இருக்கும் அந்த வலைப்பதிவிற்குச் செல்ல முடியும்.

அந்தக் குருடருக்கு விழிதான் குருடாக இருந்ததேத் தவிர, பார்வையில் குருடில்லை. சாகப்போகிறோம் என்று அறிந்தும் மற்றொரு சாகக்கிடக்கும் உயிருக்கு நம்பிக்கையூட்டி அவனை பிழைப்பிக்க வைப்பவருக்கு, மானுடத்தின்மீது எவ்வளவு காதலும் பக்தியும் இருந்திருக்கும்.