8 Jun 2013

பூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001-ம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி, தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான "மெசபடோமியா" பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது என தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான்காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் கடந்த 1990 ம் ஆண்டில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஓர் ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வுகள் 93-ம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்த சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

இது தவிர சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன "ட" வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இத்துடன், நீரில் சுமார் 23 அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85 அடி நீளமும், 2 மீ உயரமும் கொண்ட பல பொருள்கள் கண்டறியப்பட்டன.

இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம், தன்னுடைய ஆய்வை நிதிப்பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த கிரஹாம் ஹான்காக், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தார்.

நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சேர்ந்த "சானல் 4" என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த "லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001-ம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

அந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன "சைடு ஸ்கேன் சோனார்" என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது.

பின்னர், அக்காட்சிகளை கிரஹாம் ஹான்காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக், அந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார்.

இந்த நகரம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருக்கக்கூடும் என ஹான்காக் கருதினார்.

தனது ஆராய்ச்சியைப் பற்றிய விவரங்களை அவர், இங்கிலாந்தின் புகழ்பெற்ற டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப் பேராசிரியர் கிளன் மில்னே என்பவரிடம் தெரிவித்தார்.

இதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிளன் மில்னே, ஹான்காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார். சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக்கூடும் என்றும், அதனை வைத்துப் பார்க்கும் போது இந்த நகரம் 11,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்ற முடிவினை அறிவித்தார்.

இதன்மூலம் உலகில் நவீன நாகரிகம், நமது பூம்புகார் நகரில் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தெளிவாகிறது.

பூம்புகாரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அண்டர்வேர்ல்டு என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒளிபரப்பப் பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர் உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

http://topdocumentaryfilms.com/underworld/


மேற்கண்ட பதிவு எனக்கு முகநூலில் வந்தது.